என்னவென்று தானே யோசிக்கிறீர்கள்! நம் முன்னேற்றத்தில் மட்டுமல்ல அடிப்படையான நிம்மதியான வாழ்க்கைக்கே இது மிகவும் அவசியம். அது என்னவென்றால், மற்றவர்களில் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலை கொள்ளாமல் இருப்பது!
இதை நீங்கள் எல்லா இடங்களிலும் கேட்டிருக்கலாம்! எல்லா பிரபலங்களும் எல்லா மேடைகளிலும் பேசி கூட கேட்டிருப்பீர்கள். ஆனால் இதை செய்து பார்த்து அதன் விளைவை நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்களா?
அது தான் இங்கே முக்கியமானது! இதன் தாக்கம் எப்படி பட்டது என்ன செய்ய முடியும். என்ன தெளிவு கிடைக்கும் என்பதை பின்வரும் கதை உங்களுக்கு உணர்த்தும்.
இது சிறிய விஷயம் என்றாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத பாதிப்பை உருவாக்கும்
குரு தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு வீட்டின் வாசலில் விஜய் அமர்ந்திருப்பதை பார்க்கிறான். விஜய் மிகவும் சோகமாக தெரிந்ததால் அவன் அருகில் செல்கிறான் குரு என்னவென்று விசாரிக்க
குரு : விஜய், என்னாச்சு? ஏன் இப்படி சோகமா உட்காதிருக்க!?
விஜய் : ஒண்ணுமில்லையா! (சலிப்பு,கோவம்)
குரு : உன் முகத்தை பார்த்தாலே தெரியுது, என்னனு சொல்லு! (அழுத்தம்)
விஜய் : ஒண்ணுமில்லன்னு சொல்றேன் ல! பேசமா போ! (கோவம்)
குரு அவன் அருகில் அமர்கிறான். எதுவும் கேட்காமல் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறான்
விஜய் : (கண்கள் கலங்குகின்றன, முனுமுனுக்கிறான்) என் தலைவிதி! என்னத்த சொல்ல!
குரு : கொஞ்சம் சத்தமா பேசு! அப்ப தான எனக்கு கேட்கும்!
விஜய் : நீ வேற, வெறுப்பேத்தாத!
குரு : நான் என்னப்பா பண்ணேன்!
விஜயின் மனநிலை புரிந்ததால் அவனை அமைதியாக கையாள்கிறான் குரு
விஜய் : (கோவம்) ஆமா, நான் தான் எல்லாம் பண்ணேன்! அதெல்லாமே தப்பு தான். போதுமா!
குரு : டேய், நீ என்ன பேசுறேன்னு சத்தியமா எனக்கு புரியல! தெளிவா சொல்லுடா!
விஜய் : (ஆதங்கம்) என்னத்த சொல்ல! நான் எது செய்தாலும் அது விளங்க மாட்டேங்குது! எது பேசுனாலும் தப்பா தான் போகுது! ஏன் நான் பொறந்தேனு வெறுப்பா இருக்கு!
குரு : டேய், எல்லாரும் இந்த மாதிரி ஒரு நாள் புலம்பி இருப்பாங்க! நீ இன்னைக்கு புலம்பிருக்க! புலம்பாதவங்க இனி புலம்ப போறாங்க! என்ன நடந்துச்சுனு சொல்லு!
விஜய் : (கோவம்,சலிப்பு) உனக்கு விளையாட்ட தெரியுதுல! உனக்கு என்ன, நீ நல்லா இருக்க! அதனால பேசுவ!
குரு : நான் ஒன்னும் விளையாடல! நீ சொல்றது சரிதான்! நான் நல்லா தான் இருக்கேன். ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு நாள் இதே மாதிரி நானும் புலம்புனவன் தான்! அதனால தான் இப்போ உனக்கு என்ன பிரச்சனைன்னு கேட்கிறேன். அந்த வலி எப்படி இருக்கும்னு எனக்கும் தெரியும்!
விஜய் : என்ன சொல்ற! உனக்கு என்ன பிரச்சனை அப்படி! எனக்கு இருக்குற பிரச்சனை அளவுக்கு ஒன்னும் உனக்கு வந்திருக்காது! (சலிப்பு)
குரு : எல்லாருக்கும் அவங்க அவங்க பிரச்சனை எப்பவுமே பெருசுதான்! நானும் இப்படி தான் பேசுனேன்! அப்போ, எல்லாமே வெறுப்பா இருந்துச்சு!
என் பிரச்சனை என்னனு, என் அம்மா என்கிட்ட கேட்க வந்தப்போ நானும் இப்படி தான் எரிஞ்சு விழுந்தேன்! ஆனா, அவங்க பொறுமையா என்ன பிரச்சனைன்னு என்கிட்டே கேட்டாங்க!
இந்த தடவையும் நான் என் தொழிலுக்கு கேட்ட லோன் கிடைக்கல மா! இனி என்ன பண்ண போறேன்னு தெரியல! அப்பா ஏற்கனவே தொழில் ஆரம்பிக்கிறதெல்லாம் உனக்கு சரிப்படாது, நீ எதாவது வேலைக்கு போனு திட்டிகிட்டே இருக்காரு.
இன்னும் இந்த விஷயமும் தெரிஞ்சா, அவ்வளவுதான். என்ன கண்டிப்பா வேலைக்கு போக வச்சிருவார்! நான் என்ன பண்ண போறேன்னு தெரியலையே மா! என் கனவு எல்லாம் அவ்வளவு தானா!?
இதுவரை ஏனோதானோ என்று பேசிக்கொண்டிருந்த விஜய். குரு தன் பிரச்சனை பற்றி பேச தொடங்கவும் ஆர்வமானன்
இப்படி புலம்புன என்ன பாத்து, என் அம்மா சிரிச்சாங்க! எனக்கு ரொம்ப கோவம் வந்து கத்தினேன். உனக்கு என் கனவு விளையாட்ட போச்சில்லேனு, நானும் உன்ன மாதிரியே பேசுனேன்!
ஆனா என் அம்மா பொறுமையா, நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுன்னு சொல்லிட்டு
“உனக்கு நீ செய்ய போற தொழில் பிடிச்சிருக்கா” னு கேட்டாங்க.
“ரொம்ப மா, அதான் என் வாழ்க்கை” னு சொன்னேன்.
“சரி, அதை சரியாய் நடத்துக்குறதுக்கு தேவையானதெல்லாம் கத்துக்கிட்டியா” னு கேட்டாங்க
“கத்துக்கிட்டேன் மா” னு சொன்னேன்.
“அப்பறம் என்னாச்சுன்னு இப்போ இப்படி புலம்பிட்டு இருக்க??” னு கேட்டாங்க.
“என்னமா நீ, அதை செய்ய பணம் வேணுமில்ல! அதுக்கு தான் லோன் கிடைக்காலைல! அதான் என் பிரச்சனை!” னு சொன்னதுக்கு
“இவங்க இல்லனு சொன்ன வேற யார்கிட்டயாவது போய் கேளு” னு சொன்னாங்க!
“எதனை பேர்கிட்ட மா! கேட்கிறது! கிட்டத்தட்ட எல்லா பேங்க் கும் இல்லனு சொல்லிட்டாங்க” னு சொன்னதுக்கு
“திரும்ப போய் கேளு, ஒரு தடவை மட்டும் தான் கேட்பியா, நமக்கு ஒன்னும் வேணும்னா அது கிடைக்கிற வரைக்கும் நாம அத கேட்டுகிட்டே இருக்கணும்” னு சொன்னாங்க!
அந்த வார்த்தையை கேட்டப்போ மனசுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு! ஆனா அவங்க அதோட நிறுத்தல!
“உன் பிரச்சனை என்னனு தெரியுமா! பணம் கூட நீ ரெடி பண்ணிடுவ” னு சொன்னாங்க!
“என்ன மா சொல்ற! வேற என்ன பிரச்சனை” னு கேட்டதுக்கு
“உன் அப்பா என்ன நினைப்பார்னு யோசிக்கிற, உன் நண்பர்கள், நம்ம உறவுக்கார பசங்க எல்லாம் ஒரு வேலைல சேர்த்திட்டாங்க. நான் இன்னும் இப்படியே இருக்கேனே. அவங்க எல்லாரும் என்ன நினைப்பாங்கனு நீ கவலைப்படுற தான” னு கேட்டாங்க
“ஆமா, பெத்த அப்பவே என்ன பத்தி இப்படி பேசும்போது, மத்தவங்க என்ன நினைப்பாங்கனு சொல்லு! அப்பா என்ன ஒவ்வொரு முறை திட்டும்போதும், எனக்கே நான் சரியான முடிவு தான் எடுத்துருக்கேனோ னு சந்தேகம் வந்துடுது!” னு சொன்னதும்
“இது தான் உன் பிரச்சனை, அப்பா நினைக்கிறது, மத்தவங்க நினைக்கிறது இருக்கட்டும். உன்ன பத்தி நீ என்ன நினைக்கிற??” னு கேட்டாங்க
விஜய் ரொம்ப அமைதியாக குரு பேசுவதை கேட்டுக்கொண்டு இருக்கிறான்
“என்னால முடியும், எப்படியும் பணம் வாங்கி தொழில் பண்ணி முன்னேறிடுவேன். அதுக்கான எல்லா விஷயங்களும் தெளிவான திட்டமும் என்கிட்டே இருக்குனு” சொன்னதும் சிரிச்சாங்க
“முட்டாள், மத்தவங்க என்ன நினைப்பாங்கன்ற எண்ணம் இல்லாம நீ யோசிக்கும்போது, எவ்வளவு தெளிவா யோசிக்கிற! வேற என்னடா வேணும்? மத்தவங்க, ஏன்?, உன் அப்பா என்ன நினைப்பாருனு கூட நீ யோசிச்சா, நீ நீயா இருக்க முடியாதுடா! போ போய் அடுத்து என்ன செய்யணும்னு பாரு” னு சொல்லிட்டு போய்ட்டாங்க.
அவங்களோட வார்த்தைகள் என்ன ரொம்ப யோசிக்க வச்சிருச்சு! மத்தவங்க என்ன நெனைச்சா என்ன நான் தெளிவா தான் இருக்கேனு எனக்கு புரிஞ்சது. அப்போ வந்துச்சு பாரு ஒரு நம்பிக்கை! வேற மாறி!
நேர என் அப்பா கிட்ட போனேன். இந்த தடவையும் லோன் கிடைக்கல. ஆனா, எப்படியும் வாங்கிடுவேன்னு தைரியமா சொன்னேன்.
அதுக்கு என் அப்பா சொன்ன பதில் எனக்கு இன்னும் ஆச்சர்யமா இருக்கு.
“டேய், இப்போ நீ ஜெயிச்சுடுவேன்னு எனக்கு தோணுது. இந்த நம்பிக்கையை இது வரை உன்கிட்ட நான் பாக்கல, அதுனாலதான் எங்க உன் வாழ்க்கை வீனா போய்டுமோனு பயந்தேன்! பரவாயில்லை, என் நண்பர் ஒருத்தர் இருக்கார் அவர்கிட்ட நான் பேசுறேன். அவர் எதாவது நமக்கு உதவுவார்” னு சொல்லிட்டு போய்ட்டார்.
அந்த நண்பர் குடுத்த பணத்துல தான் தொழில் தொடங்கி, நான் இன்னைக்கு நல்லா இருக்கேன். ரொம்ப நல்ல இருக்கேன் (பரவசம்)
அதுனால தான் கேட்கிறேன், உனக்கு என்ன பிரச்சனைன்னு. உனக்கு சொல்ல விருப்பம் இல்லனா பரவாயில்ல. ஆனா நான் சொன்னத மனசுல வச்சுக்க
என்று சொல்லிவிட்டு எழுந்த குருவின் கைகளை பிடிக்கிறான் விஜய். விஜயின் முகத்தை பார்த்த குரு மீண்டும் அமர்கிறான்
விஜய் : உன்கிட்ட சொல்ல கூடாதுனு இல்ல. ஆனா, என் பிரச்சனையும் இது தான். எந்த வேலைலயும் என்னால ரொம்ப நாள் இருக்க முடியல, எனக்கு பிடிச்ச வேலை எதுனும் எனக்கு தெரியல. அதை எப்படியாவது தெரிஞ்சுக்கணும்னு நானும் பல விஷயங்களை முயற்சி பண்றேன். எதுவும் நான் எதிர் பார்த்த மாதிரி இல்ல! ஆனா, எனக்கு பிடிச்சதை கண்டுபிடிச்சு நான் செய்வேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!
என் வீட்டுல உள்ளவங்க யாரும் என்ன புரிஞ்சுக்காம பேசும்போது, நான் எதுக்கும் லாயக்கு இல்லனு சொல்லும்போதெல்லாம் ரொம்ப வலிக்குது. இப்போ கூட அதே சண்டை தான் வீட்டுல! அதான் இங்க வந்து உட்காந்திருந்தேன்.
குரு விஜயின் தோலை தட்டியபடி
குரு : நீ என்ன செய்றேன்ற தெளிவு உனக்கிருந்தா போதும், எல்லாரும் புரிஞ்சுக்க வாய்ப்பில்லை. அவங்க எல்லாரும் உன்ன பத்தி வச்சுருக்க அபிப்ராயம் முக்கியம் இல்ல, நீ உன்ன பத்தி என்ன அபிப்ராயம் வச்சுருக்கேன்ற தான் முக்கியம்! அதுல நம்பிக்கை வை! நிச்சயமா பாதை கிடைக்கும்! எனக்கு கிடைச்ச மாதிரி!
விஜய் : இப்போ புரிஞ்சுக்கிட்டேன்டா! உன்கிட்ட அப்படி பேசியிருக்க கூடாதுடா! என்ன மன்னிச்சுருடா!
குரு : டேய், நீ அப்படி பேசுனதால தான். எனக்கு என் விஷயங்கள் ஞாபகம் வந்தது! எல்லாம் நன்மைக்குத்தான். போ போய் வேலைய பாரு!
சொல்லிவிட்டு எழுந்து போனான் குரு. விஜயின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். நடந்து சென்று கொண்டிருந்த குருவை பார்த்து மனதில் நன்றி சொல்லி கொண்டே இருந்தான்.
இது போன்ற அனுபவம் உங்களுக்கும் இருக்கலாம். இல்லை என்றால் இதை உங்கள் நண்பன் உங்களுக்கு கூறுவதாக எடுத்துக்கொண்டு இதிலிருந்து வெளிவந்து உங்கள் உலகை பார்க்க முயற்சி செய்யுங்கள்.
இந்த வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது, அவ்வளவு சுலபமானது என்று உங்களுக்கே புரியும்.
நன்றிகள் கோடி!!!
Comments
Post a Comment