ஆழ்மனதில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்களை தான் நாம் நம் வாழ்க்கையாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் நம் விருப்பங்களை ஆழ்மனதிற்கு கொண்டு செல்வது எப்படி என்பது தான் பலரின் மனதில் ஓடும் விடை தெரியாத பெரிய கேள்வி!
அதற்க்கு இது தான் பதில்!
உங்களுடைய விருப்பங்கள் ஆழ்மனதிற்கு செல்கிறதா இல்லையா என்ற கவலையே உங்களுக்கு தேவையில்லை. இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஆழ்மனதை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்!
அப்படியென்றால் நம் விருப்பங்களை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா?
ஆழ்மனதை உருவாக்கும் அல்லது மாற்றியமைக்கும் சக்தி நம்முடைய விழிப்பான (conscious) செயல்களால் தான் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்தாலும் கொஞ்சம் விழிப்போடு (conscious) செய்தாலே நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் வல்லமையை அடைவீர்கள்! எப்படி??
ஒரு உதாரணம் சொல்கிறேன்!
நீங்கள் வழக்கமாக செய்யும் ஒரு செயலை எடுத்துக்கொள்வோம். அதாவது நீங்கள் உங்கள் வண்டி சாவியை வைக்கும் ஒரு பழக்கத்தை உதாரணமாக கொள்வோம்.
நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் வழக்கமாக எங்கே சாவியை வைப்பீர்களோ அங்கே சரியாக வைப்பீர்கள். எந்த சிந்தனையில் இருந்தாலும், கவனம் இல்லையென்றாலும் அதை சரியாக அதே இடத்தில் வைப்பீர்கள். இல்லையா?
இதற்க்கு காரணம், இந்த செயல்முறையை நம் ஆழ்மனம் ஒரு பதிவாக கொண்டு அதை சரியாக செய்வதால் தான். நம்முடைய 99 % செயல்கள் இப்படி தான் நிகழ்கின்றன. இப்பொது நீங்கள் இந்த செயல்முறையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். புதியதொரு இடத்தில் சாவியை வைக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
என்ன செய்வீர்கள்?
அடுத்த நாட்களில் கொஞ்சம் கவனமாக சாவியை இடம் மாற்றி வைப்பீர்கள். இதே கவனத்துடன் நீங்கள் ஒரு வாரம் சாவியை புதிய இடத்தில் வைத்தவுடன், அடுத்து வரும் நாட்களில் இயல்பாகவே நீங்கள் புதிய இடத்தில் சாவியை வைக்க ஆரம்பித்து விடுவீர்கள். இல்லையா?
இதற்க்கு காரணம், உங்கள் விழிப்பான செயலால் ஆழ்மனம் தன் பழைய பதிவை மாற்றிக்கொண்டு புதிய செயல்முறையை எடுத்துக்கொண்டது! அதாவது உங்கள் ஆழ்மனதிற்கு உங்கள் புதிய விருப்பத்தை கொண்டு சென்று விட்டீர்கள் என்று தானே அர்த்தம்!
இவ்வளவு தான் விஷயம்!
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதை மாற்ற விரும்பினாலும் அதற்க்கு நீங்கள் விழிப்பாக செயல் செய்வது தான் முதல் படி! அந்த விழிப்பான செயல்களை பின்பற்றி ஆழ்மனம் தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது!
உங்களுக்கு இன்னுமொரு கேள்வி கூட எழலாம்!
சாவி போன்ற விஷயங்களில் நான் விழிப்பாக செயல் செய்து மாற்றிக்கொள்ளலாம். ஆனால் என் சூழலுக்குள்ளே இல்லாத புதிய விஷயங்களை எப்படி உருவாக்குவது??
அதற்க்கு தான் நீங்கள் கற்பனையை பயன்படுத்த வேண்டும். உங்கள் கற்பனையில் நீங்கள் விரும்புகின்ற புதிய விஷயங்கள் அனைத்தையும் உருவக படுத்தி அதுவும் விழிப்பாக உருவக படுத்தி அதை விழிப்பாக அனுபவிக்கும் போது, அதுவும் நீங்கள் அதை திரும்ப திரும்ப அனுபவிக்கும் போது உங்கள் ஆழ்மனம் அந்த காட்சியை ஒரு பதிவாக ஏற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையில் அதை உருவாக்குகிறது.
நீங்கள் விழிப்பாக இல்லாமல், வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று அவசர அவசரமாக நீங்கள் சிந்தனையையோ அல்லது கற்பனையையோ செய்வீர்கள் என்றால், உங்கள் ஆழ்மனம் அதை ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால், அதை உருவாக்க தேவையான போதுமான கவனமும் அதை சார்ந்த ஆற்றலும் அதற்க்கு கிடைப்பதில்லை. அதனால் தான் இங்கு விழிப்பு என்பது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது.
இந்த நொடியில் இருந்து நீங்கள் விழிப்பாக செயல் செய்து உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு தேவையான விதத்தில் உருவாக்கி கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றிகள் கோடி!!!
Comments
Post a Comment