எதை ஏற்றுக்கொள்வது, எப்படி ஏற்றுக்கொள்வதால் நம் வாழ்க்கை மாறும் என்று உங்களுக்கு கேள்வி வருகிறதா?
நம்முடைய வாழ்க்கையில் நம்மை முன்னேற விடாமல் செய்வதில் முக்கியமான பங்கு நாம் கடந்த காலத்தை இன்னும் நம் மனதில் சுமந்து கொண்டு இருப்பது தான்!
அப்படி நாம் கடந்த காலத்தை மனதில் சுமந்து கொண்டு இருக்கும் போது, சிந்தனையும் செயலும் அதை சார்ந்தே இருக்கும். எந்த செயல் செய்யும்போது கடந்த காலம் போல நடந்துவிட கூடாது என்ற பயம் இருக்கும். அதே போல் யார் உங்களிடம் பேச வரும்போது நீங்கள் உங்கள் கடந்த காலத்தை புலம்ப ஆரம்பித்துவிடுவீர்கள்!
சிலர் வெளிப்படையாக யாரிடமும் புலம்பாமல், தனக்குள்ளே புலம்பி தீர்ப்பார்கள். நீங்கள் அவசியம் இதிலிருந்து வெளிவந்து உங்களுக்கான அடுத்த விஷயத்தை செய்ய வேண்டும்! அப்போது தான் உங்கள் வாழ்க்கை மாறும்!
இதை இன்னும் தெளிவாக விளக்கும் வகையில், இரு நண்பர்களின் உரையாடலை படியுங்கள்!
[ குருவை சந்திக்க அவன் நண்பன் விஜய் குருவின் வீட்டிற்கு வருகிறான். விஜய் ஒரு புலம்பல் பேர்வழி என்றாலும் குருவிற்கு உயிர் நண்பன், குரு அவனை வரவேற்று சோபாவில் இருவரும் அமர்கின்றனர்]
குரு : என்னடா ! எப்படி இருக்க? அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா?
விஜய் : எல்லாரும் நல்ல இருகாங்க டா! நீ எப்படி இருக்க? வீட்டுல எல்லாரும்?
குரு : எல்லாரும் சூப்பரா இருக்கோம் டா! வேற என்ன? எதாவது விசேஷம் உண்டா??
விஜய் : எனக்கு என்னடா விசேஷம் இருக்க போகுது? (சோகம்)
குரு : ஏண்டா? நீ நல்லதே யோசிக்க மாட்டியா? எப்ப பாத்தாலும் விரக்தியா பேசிகிட்டு!!
விஜய் : என்னடா! நீயும் இப்படி சொல்ற?? மத்தவங்க தான் என்ன புரிஞ்சுக்கல, எல்லாரும் என்ன பாத்தாலே ஓடுறாங்க! நீ ஒருத்தன் தான் எனக்கு னு இருக்கனு நினைச்சுகிட்டு இருக்கேன்! நீயும் என்னடானா இப்படி பேசுற?? (சோகம்)
குரு : டேய், (அழுத்தம்) நீ என் உயிர் நண்பன் தான் டா? அதுல ஒரு பிரச்னையும் இல்ல! இன்னும் சொல்ல போன, அதனால தான் நீ சந்தோசமா இருக்கணும்னு நெனைக்கிறேன். நானும் பல தடவை உனக்கு மறைமுகமா சொல்லி பாத்துட்டேன் புலம்புறத, விரக்தியா பேசுறத நிறுத்துன்னு. ஆனா நீ மாறவே இல்ல!
விஜய் : (சோகம்,சலிப்பு) எனக்கு அதாண்டா நடக்குது! அதனால தாண்ட நான் பேசுறேன்!
குரு : எங்க எல்லாருக்கும் எப்பவுமே நாங்க நெனைச்சது மட்டும் தான் நடக்குதுன்னு நினைச்சுகிட்டு இருக்கியா?
விஜய் : உனக்கு என்ன பா? நல்ல வேலை, சம்பளம் அப்பறம் என்ன? நல்லா தான போய்கிட்டு இருக்கு!
குரு : (சிரிப்பு) நான் இப்போ அந்த வேலைல இல்ல!
விஜய் : என்னடா சொல்ற?
குரு : நன் வேலை பாத்த கம்பெனியோட நஷ்டத்தை குறைக்கிறேன்னு நெறைய பேர வேலையைவிட்டு அனுப்பிட்டாங்க! அதுல நானும் ஒருத்தன்.
விஜய் : (சோகம்) என்னடா சொல்ற? உனக்கும் இப்படியா ஆகணும்?
குரு : டேய் , என்னை நெனைச்சும் புலம்பாத! நான் வேற வேலை ரெடி பண்ணிட்டேன். வர்ற 1 தேதில இருந்து வேலைக்கு போய்டுவேன்.
விஜய் : (சந்தோசம்) சூப்பர்டா! பாத்தியா உனக்கு உடனே ஒரு வேலை கெடைச்சுடுச்சு! ஆனா எனக்கு அப்படியா நடக்குது? எல்லாம் நான் வாங்கி வந்த வரம்! (சோகம்)
குரு : (கோவம்) டேய், உன்ன மாதிரி நானும் நடந்தத நெனைச்சே புலம்பிகிட்டு இருந்தா எனக்கும் இந்த வேலை கெடைச்சுருக்காது.
நான் வேலை போன விஷயத்தை யார்கிட்டயும் சொல்லல, ஏன்னா அவங்க எல்லாரும் என் மேல உள்ள அக்கரைல பேசுறேன்னு என்ன கூட கொஞ்சம் கவலை பட வச்சுடுவாங்க!
இப்ப நீயும் அத தான முயற்சி பண்ண?
விஜய் : (தலையை குனிந்து கொண்டான்)
குரு : இத என் அப்பா கிட்ட சொன்னப்போ, “டேய், வேலையா இல்ல, இத போய் பெருசு பண்ணிக்கிட்டு” னு சொன்னார். அத கேட்டதும் எனக்கு ஒரு புது தெம்பு வந்தது. இந்தா பாரு, வேலையும் கெடைச்சுடுச்சு.
அப்ப தான் எனக்கு உன் ஞாபகம் வந்தது, உன்னோட இந்த குணாதிசயத்தை பத்தி உன்கிட்ட பேசணும்னு நெனச்சேன். ஆனா, ஆச்சர்யம். நீயே இன்னைக்கு வந்துட்ட!
விஜய் : என்னனு சொல்லுடா, எனக்கும் இப்படியே இருக்க புடிக்கல! எல்லாரும் இதனால தான் என்ன வெறுத்துட்டாங்கனு தோணுது!
குரு : உனக்கே இது தோணிருக்குறது நல்ல விஷயம் தான்! ஆனா ஒரு உண்மையா நீ தெரிஞ்சுக்கணும்!
விஜய் : என்னடா? (ஆச்சர்யம்)
குரு : யாரும் உன்ன வெறுக்கல, பேசுறத நிறுத்துட்டாங்க. அவ்வளவு தான். அதுவும் கூட நீ இந்த புலம்புறத நிறுத்தணும்னு தான்!
விஜய் : என்னடா சொல்ற?! (ஆச்சர்யம்)
[குரு தன் மொபைலை எடுத்து எல்லா நண்பர்களும் விஜய்யை பற்றி குருவிடம் msg மூலம் விசாரித்ததை காண்பிக்கிறான்]
குரு : பாரு! உன்ன பத்தி என்கிட்ட விசாரிக்கிறாங்க!
[மொபைலை கையில் வாங்கி அனைவரின் msg யையும் படிக்கிறான், அவன் மனசு சந்தோஷத்தால் நிரம்புகிறது]
விஜய் : (சந்தோசம்) ரொம்ப சந்தோசம் டா! எதோ பாரம் குறைஞ்ச மாதிரி இருக்குடா!
குரு : நீ பாக்குறவங்க கிட்ட எல்லாம் புலம்புறத நிறுத்தி இருந்த, இன்னும் எவ்வளவு சந்தோசமா இருந்திருக்கலாம்!
விஜய் : ஆமாண்டா! ஆனாலும் எனக்கு நடந்தது என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. யார்கிட்டயாவது சொன்னாதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு! என்ன பண்றது!
குரு : ஒரு விஷயம நடந்தவுடனே சொன்ன, பரவாயில்ல. ஆனா நீ நுறு தடவையாவது சொல்லிர்ர! அதான் பிரச்சனை!
விஜய் : எனக்கே தெரியுதுடா! ஆனா என்ன பண்றதுனு தெரியல!
குரு : உனக்கு என்ன நடந்ததோ அத முதல்ல ஏத்துக்கோ! அப்போ தான் யார்கிட்டயும் புலம்பனும்னு தோணாது!
விஜய் : ஏத்துக்குறது நா?? எப்படி டா?
குரு : எனக்கு இப்படி நடந்திருக்க கூடாது, இது ஏன் இப்படி நடந்துச்சுனு தான நீ புலம்புற!
விஜய் : ஆமாம்! ஏத்துக்கவே முடியல! (யோசிக்கிறான்)
குரு : “ஏத்துக்கவே முடியல!” இந்த வார்த்தை தான் பிரச்சனை! உனக்கு நடந்துருச்சு! இனி அதை ஒன்னும் பண்ண முடியாதுனு நீ யோசிக்க மறுக்குற!
ஒன்னும் பண்ண முடியாதுனு புரிஞ்சாத, மனசு சரி னு ஏத்துக்கிட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கும்! அப்படி யோசிக்க ஆரம்புச்சுட்டாலே நாம அடுத்த படிய எளிமையா அடைய முடியும்! புரியுதா??
விஜய் : உண்மைதாண்ட, நான் அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்க முயற்சி பண்ணும்போதெல்லாம், இது இப்படி நடக்காம இருந்திருக்கலாமே னு சிந்தனை வரும் அப்படியே அதுல மூழ்கிடுவேன்! இதுனால தான் என்னால இன்னும் ஒன்னும் பண்ண முடியலையோ!
குரு : அதான் உண்மை! இனினாலும் உனக்கு என்ன நடக்குதோ, நடந்ததோ அத மனசார ஏத்துக்கிட்டு வாழ்க்கைல அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற பாரு!
விஜய் : நிச்சயமா முயற்சி பண்றேன் டா! கண்டிப்பா ஏத்துக்குவேன்! வேற ஒன்னும் பண்ணவும் முடியாது!. நான் முயற்சி பண்றேன் டா! (புரிதல்)
குரு : (சந்தோசம்) சந்தோசம் டா! நிச்சயமா இத உன்னால் செய்ய முடியும்!
விஜய் : (சந்தோச புன்னகை, நட்பு) ரொம்ப தேங்க்ஸ் டா!
குரு : டேய், (செல்லமாக முறைக்கிறான்). அப்பறம் இன்னொரு விஷயம்டா!
விஜய் : சொல்லுடா!
குரு : ஹரி ஒரு புது தொழில் ஆரம்பிக்க போறானாம். அதுல உன்ன பார்ட்னரா ஆக்க ஆசைப்படுறதா சொன்னான்!
விஜய் : என்னடா சொல்ற! நான் பார்ட்னரா? என்கிட்டே முதலும் இல்லையே டா!
குரு : நீ முதலீடு எதுவும் செய்ய வேணாம்! அவன்கூட இருந்தா போதும். நான் இத பத்தி அவன்கிட்ட கேட்டப்போ, விஜய மாதிரி ஒரு உழைப்பாளியும் , நம்பிக்கையான ஆளும் கிடைக்காதுனு சொன்னான். ஆனா புலம்பிகிட்டே இருப்பானேனு வேற பயந்தான். அதுனால தான் இன்னும் உன்கிட்ட இத பத்தி பேசமா இருக்கானு நெனைக்கிறேன்!
விஜய் : என்னால நம்பவே முடியல டா! அதுவும் என்ன பத்தி ஹரி இப்படி ஒரு அபிப்ராயம் வச்சுருப்பானு நினைக்கவே இல்ல!
குரு : புலம்பிகிட்டே இருந்தா என்ன தான் தெரியும்! சரி விடு! முடிஞ்சது போகட்டும்! இன்னைக்கே அவனை போய் பாரு!
விஜய் : நிச்சயமா டா! அடுத்த வேலை அதான்!
விஜய் அன்றிலிருந்து தான் புலம்புவதை படிப்படியாக குறைத்து கொண்டு, இன்று ஹரி என்ற நண்பனுடன் இணைந்து தொழில் செய்து நன்றாக இருக்கிறான்!
நீங்களும் கடந்த கால எதோ ஒரு நிகழ்வில் மாட்டிக்கொண்டு, இன்னும் அதை எண்ணியே புலம்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், தயவுசெய்து அதை ஏற்றுக்கொண்டு வெளியில் வாருங்கள்!
முடிந்ததை நாம் மாற்ற இயலாது, ஆனால் இனி உருவாக போகும் சூழ்நிலையில் நாம் மாற்றத்தை கொண்டு வர இயலும்! அதை தவற விட்டு விடாதீர்கள்!
பிரபஞ்சம் உங்கள் துணை நிற்கும்! நன்றிகள் கோடி!
Comments
Post a Comment